இன்று சனிப்பெயர்ச்சி. இன்று முதல் மகரம் ராசியில் பிரவேசித்த சனிபகவானுக்கு ஏராளமான பக்தர்கள் பரிகாரம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். திருநள்ளாறு உள்ளிட்ட சனீஸ்வரன் கோவில்களில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கொரோனா காரணமாக திருநள்ளாறு நள தீர்த்தத்தில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை சனி, ராசி மாறுவதுண்டு. அந்த வகையில் தனுசு ராசியில் இருந்த சனிபகவான் இன்று மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். இதனையடுத்து திருநாள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இன்று திருநள்ளாறில் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இன்று சனிபெயர்ச்சி விழாவை அடுத்து எள் தீபம் ஏற்றி பக்தர்கள் சனிபகவானை வழிபட்டு வருகின்றனர்
வடதிருநள்ளாறு என்று போற்றப்படும் பொழிச்சலூர் சனிபகவான் கோவிலில் இன்று சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருக்கொள்ளிக்காடு பொங்குசனீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அங்கு சனிபகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது