ரஜினி, கமல் இருவருமே செய்யவில்லை - மன்சூர் அலிகான் விளாசல்

புதன், 16 ஆகஸ்ட் 2017 (16:24 IST)
மக்களின் முக்கிய பிரச்சனைக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் குரல் கொடுக்கவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சமீபகாலமாக, நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு எதிராக பல கருத்துகளை கூறி வருகிறார். அதற்கு அதிமுக அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 
 
இந்நிலையில்  செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான் “முதலமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் அவரது இலக்கு தமிழகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். அதில் தவறில்லை. ஆனால், முதலமைச்சர் மட்டும் பதவி விலகினால் போதுமா? அவரை நியமித்தவரையும் 420 எனக் கூறுகிறார்கள். இந்த அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை. மத்திய அரசும் இப்படித்தான் செயல்படுகிறது. எனவே, அதுவும் பதவி விலக வேண்டும். 
 
அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. எனவே, இனி கட்சி சாராத மக்கள் பிரதிநிதிகளை அந்தந்த பகுதிகளிலிருந்து மக்களே தேர்வு செய்ய வேண்டும். அனைத்து எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் முதல்வர் என அனைவரும் கட்சி சார்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும்.
 
நானும் கமல் ரசிகர்தான். ஆனால், அவர் கருத்து தெரிவித்தால் மட்டும் போதாது. நதிகள் இணைப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு அவர் மக்களுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். ரஜினியும் இதை செய்யவில்லை. இனியாவது அவர்கள் இருவரும் மக்கள் பிரச்சனைக்கு இணைந்து போராட முன் வர வேண்டும்’ எனக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்