கோவை மாவட்டம் நரசிபுரத்தில் தினேஷ்குமார் என்பவரின் பண்ணை வீடு உள்ளது. அங்கு மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று பதுங்கி இருப்பதாக அதனால் பொதுமக்கள் பாதுகாப்பற்ற உணர்வு உள்ளதாகவும் வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் அங்கு கிளம்பினர். அங்கு சென்று பார்த்தபோது 16 அடி நீளமிருந்த ராஜநாகத்தைப் பார்த்து வனத்துறை அதிகாரிகளே மிரண்டு போயுள்ளனர். இதனை அடுத்து அந்த பாம்பை பிடிக்க பாம்பாட்டி சந்தோஷ்குமார் என்பவரை நாடியுள்ளனர்.
பொதுமக்கள், வனத்துறையினர் என அனைவரையும் அதிரவைத்த அந்த பாம்பை அவர் அனாசயமாக தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். துணிச்சலாக அதைப் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.. அதையடுத்து வனத்துறையினர் அந்த பாம்பை எடுத்துச்சென்று காட்டுப்பகுதியில் விட்டனர். இளைஞருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.