இனி கபடி விளையாட வேண்டுமா? - உயர்நீதிமன்றம் 12 புதிய கட்டளைகள்
திங்கள், 18 ஜூலை 2016 (01:28 IST)
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி போட்டிகள் நடத்திட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை 12 கட்டளைகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக கபடி போட்டிகள் நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் நடத்திட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு தடைச்சட்டம் 1937-இன் கீழ் வரும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி போட்டிகள் நடத்திட காவல் துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் திருநெல்வேலி தென்காசி தாலுகா திப்பம்பட்டியில் உள்ள சாரல் கபடி கிளப் என்ற அமைப்பு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் கீழ்க்கண்ட 12 கட்டளைகளை விதித்து கபடி போட்டி நடத்திட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி கபடி போட்டி நடத்திட விதித்துள்ள 12 கட்டடளைகள் பின்வருமாறு:
1. போட்டி நடத்தும் மனுதாரர் போட்டி நடக்கும் போது எந்த அரசியல் கட்சியையும், எந்த கட்சித் தலைவரையும், எந்த சாதியையும், எந்த சமூகத்தையும், எந்த பிரிவினரையும் இழிவுபடுத்தும் விதமாக கோஷங்கள் போடக்கூடாது.
2. போட்டியின் நடுவர் தொழில் முறை சார்ந்து நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தகுதி பெற்றவரையே மாவட்ட கபடி அமைப்பு நியமிக்க வேண்டும்.
3. போட்டியின் போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த அசம்பாவிதமும் நடைபெறாது என்பதற்கு மனுதாரர் உறுதி அளிக்க வேண்டும்.
4. கபடியில் பங்கேற்பவர்கள் எந்த சமூகத்தையும் அல்லது அரசியல் கட்சியையும் தாக்கும் முறையில் கோஷங்களையோ அல்லது படங் களையோ கொண்ட உடைகளை அணியக்கூடாது.
5. போட்டி நடைபெறும் இடத்தில் எந்த குறிப்பிட்ட சமூகம் அல்லது தலைவரும் உள்ள படத்தையும் பிளக்ஸ் பேனராக வைக்கக்கூடாது.
6. பங்கேற்பாளர்கள் போதை வஸ்துகளோ அல்லது மதுவையோ போட்டியின் போது குடித்திருக்கக் கூடாது.
7. எந்த அசம்பாவித சம்பவம் நடை பெற்றாலும் அதற்கு போட்டியின் அமைப்பாளர்களே பொறுப்பேற்க வேண்டும்.
8. இவற்றில் எந்த நிபந்தனையும் மீறப்பட்டாலும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கவும் போட்டியை நிறுத்தவும் அதிகாரம் உண்டு.
9. மனுதாரர் முதல் உதவி அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.
10. அங்கு இரண்டு மருத்துவர்களை நியமிப்பது வரவேற்கத்தக்கது.
11. தகுதியான எலும்பு முறிவு மருத்துவர், போட்டி நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும்.
12. பங்கேற்பாளர்களுக்கு சத்துக்களை கொண்ட பானங்கள் அளிக்க வேண்டும்.