தி.நகர் சென்னை சில்க்ஸ் புதிய கட்டிடத்திற்கு தடை: சென்னை ஐகோர்ட் அதிரடி

புதன், 25 ஜூலை 2018 (09:05 IST)
சென்னை தி.நகரில் இயங்கி வந்த சென்னை சில்க்ஸ் என்ற ஜவுளி மற்றும் தங்க நகைக்கடையின் 9 மாடி கட்டடம் கடந்த ஆண்டு மே மாதம் தீ விபத்துக்குள்ளாகி முற்றிலும் சேதமானது. இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருந்ததால் தமிழக அரசின் உத்தரவுப்படி இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது அதே இடத்தில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கட்டிடம் சி.எம்.டி.ஏ விதிகளுக்கு எதிராக கட்டப்பட்டு வருவதாகவும் இந்த புதிய கட்டிடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரணை செய்த போது தீ விபத்துக்குள்ளான அதே பகுதியில் மீண்டும் புதிய கட்டிடம் கட்ட எதன் அடிப்படையில் அனுமதியிளிக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர், மேலும் அனுமதி வழங்கப்பட்ட 20 நாட்களில் 40% கட்டுமான பணிகள் முடிவடைந்தது எப்படி? என்றும் நீதிபதிகள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர்.
 
இந்த நிலையில் சென்னை சில்க்சின் புதிய கட்டுமானத்துக்கு தடை விதித்த நீதிபதிகள், இதுகுறித்து அடுக்குமாடி கட்டிடங்களை ஆய்வு செய்து வரும் ஆய்வு குழு வரும் ஆகஸ்ட் 3 ம் தேதி நேரில் ஆஜராகி.விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்