திமுக இடைநீக்கத்திற்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (19:35 IST)
79 திமுக உறுப்பினர்களின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்வது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க இயலாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து‌ள்ளது.
 

 
சட்டப் பேரவையில் வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பத் துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அதிமுக உறுப்பினர் எஸ்.குணசேகரன் (திருப்பூர் தெற்கு) அவர்களின் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது.
 
மேலும் பேரவைத் தலைவரின் இந்தக் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, சபாநாயகர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று  கூச்சல் எழுப்பினர்.
 
சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து திமுக, சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், தியாகராஜன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சபாநாயகருக்கு இடைநீக்க அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
 
இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது.
 
அப்போது, ’உறுப்பினர்களை இடைநீக்க உத்தரவுக்கு தற்போது தடை விதிக்க முடியாது. மனுதாரரின் கோரிக்கை பற்றி விவாதிக்க வேண்டும். செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் பதிலளிக்க வேண்டும்’ எனவும் தங்களது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்