கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு பதிலளித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.
நேற்று முன் தினம் கோவையில் எழுச்சிப் பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, அங்கு பேசியபோது, திமுகவிற்கு கோயில் பணத்தை கண்டால் கண் உறுத்துவதாகவும், அந்த பணத்தைக் கொண்டு கல்லூரிகள் கட்டி வருவதாகவும், இது சதிச்செயல் என்றும் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சென்னை கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பதில் கேள்வி எழுப்பி பேசியுள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு “கோயில் பணத்தில் கல்லூரி அமைப்பதை எடப்பாடி பழனிசாமி எதிர்க்கிறார். ஆனால் அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் மருதமலை கோயில் சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதிமுக உறுப்பினர்கள் அமுல் கந்தசாமி, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் கோயில் சார்பில் கல்லூரி அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அப்படியென்றால் அவர்கள் செய்ததும் சதிச் செயலா? எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைவர்களையே ஏற்கவில்லை என தெரிகிறது. அதிமுகவை பாஜக என்னும் மலைப்பாம்பு விழுங்கி வருகிறது. வரலாறு தெரியாமல் சங்கிகள் வைக்கும் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K