ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் - முடிவுக்கு வந்த பஞ்சாயத்து

வியாழன், 30 நவம்பர் 2017 (11:46 IST)
சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


 
கடந்த சில நாட்களாகவே, ஓபிஎஸ் அணியில் உள்ள மைத்ரேயன் உள்ளிட்ட சிலர் எடப்பாடி அணியினர் மீது தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அனைவரையும் அவர்கள் அரவணைத்துப் போவதில்லை எனக் குற்றம் சாட்டி வருகின்றனர். 
 
இந்நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சமீபத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
 
மதுசூதனனையே மீண்டும் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் கூற, அதற்கு எடப்பாடி அணியில் இருந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, விருப்ப மனு பெற்று வேட்பாளரை தேர்வு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மொத்தம் 27 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர்.
 
அந்நிலையில், வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று காலை அதிமுக அலுவலகத்தில் கூடியது. அதில், ஆட்சி மன்ற குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஆலோசனை செய்தனர். முடிவில், மதுசூதனனையே வேட்பாளராக அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
 
எனவே, விரைவில் மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்