உயிருக்கு பயந்துதான் தலைமறைவானார் - மதனின் மனைவி பேட்டி

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (10:25 IST)
தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை பயந்துதான், வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவானார் என அவரின் மனைவி மற்றும் தாயார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.


 

 
கடிதம் எழுதி விட்டு தலைமறைவாகிப் போன வேந்தர் மூவிஸ் மதன், திருப்பூரில் வர்ஷா என்ற பெண்ணின் வீட்டில் பதுங்கியிருந்த போது போலீசாரிடம் கடந்த திங்கட்கிழமை சிக்கினார்.
 
மதனுக்கு பல காதலிகள் இருப்பதாகவும், அவர் பண மோசடியில் ஈடுபட்டதாகவும், உத்தரகாண்ட் போன்ற இடங்களில் வீடு வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், மதனின் 2வது மனைவி சுமலதா மற்றும் அவரது தாயார் தங்கம் ஆகியோர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது.
 
மதன் பல மாணவர்களிடம் பல கோடி பணம் வாங்கி மோசடி செய்துள்ளார் என்று கூறுகிறார்கள். ஆனால், அந்த பணம் முழுவதையும் அவர் எஸ்.ஆர்.எம். நிறுவனர் பச்சைமுத்துவிடம் கொடுத்துவிட்டார். 
 
ஆனால், இனி நீட் தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற அறிவிப்பு காரணமாக, பணத்தை வாங்கியவர்களிடம், அப்பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், பச்சைமுத்துவிற்கும் அவரது மகன் ரவி பச்சைமுத்துவிற்கும் இடையே பிரச்சனை வந்ததால், மதன் பணம் வாங்கி தந்த மாணவர்களுக்கு சீட் இல்லை என்று கூறிவிட்டார்கள்.
 
இதனால், வேறு வழியின்றி மதன் தற்கொலை முடிவெடுத்தார். ஆனால் அதற்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அவர் உத்தரகாண்டில் வீடு வாங்கவில்லை. இதுவரை அவர் போலீசாரிடம் எந்த வாக்குமூலமும் கொடுக்கவில்லை. தற்போதுதான் அவரை போலீசார் விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகின்றனர்.
 
மனைவியை தவர வேறு யாருடனும் அவருக்கு தொடர்பில்லை. அவருக்கு சில பெண்கள் உதவிகள் மட்டுமே செய்தனர். பச்சைமுத்துவிற்கும் அவரது மகன் ரவிக்கும் நெருக்கமாக இருந்த 2 உயர் போலீஸ் அதிகாரிகளால், தன்னுடையே உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்துதான் அவர் தலைமறைவாக இருந்தார். 
 
கடந்த 23ம் தேதி அவர் காவல் துறையில் சரண் அடை முடிவெடுத்திருந்தார். அதற்காக சென்னை வர டிக்கெட் முன்பதிவும் செய்திருந்தார். ஆனால், அதற்கு முன்பே போலீசார் அவரை கைது செய்து விட்டனர். மதன் மீது 128 புகார்கள் உள்ளது. ஆனால், அதில் யாரும் அவர் தன்னிடம் பணம் வாங்கியதாக கூறவில்லை. உண்மை விரைவில் வெளியே வரும்” என அவர்கள் கூறினர்.

 
அடுத்த கட்டுரையில்