முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவர் எலான் மஸ்க்கை சந்திப்பது போன்ற ஏஐ போட்டோவை பகிர்ந்து பதிவிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவும், தமிழ்நாட்டில் புதிய பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை அமைக்கவும் நேரில் அவர்களை சந்தித்து பேச அமெரிக்கா சென்றுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பல்வேறு நிறுவனங்களுடன் சுமார் ரூ.500 கோடிக்கும் மேலாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. முக்கியமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாடு குறித்த நிறுவனங்களின் பங்களிப்பு இதில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு ஏஐ படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கும், மு.க.ஸ்டாலினும் சந்தித்துக் கொள்வது போல உள்ளது.
அதை பகிர்ந்து “இந்த செயற்கை நுண்ணறிவு படம் உண்மையாக வேண்டுமென விரும்புகிறேன். ஒருவேளை டெஸ்லா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வருமானால், அது நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தி க்ரேட்டஸ் ஆப் ஆல் டைம் நகர்வாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
உலகளவில் பிரபலமான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் தயாரிப்போடு மட்டுமல்லாமல் ஏஐ ரொபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் டெஸ்லாவின் ட்ரைவர் இல்லா ஆட்டோமேட்டிக் காரில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K