கருப்பு கொடி எதிரொலி - மோடி திட்டத்தில் பல மாற்றங்கள்

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (17:01 IST)
சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என பல அரசியல் கட்சியினர் கூறியிருப்பதால், அவரின் பயண திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்நிலையில், நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், பாரதிராஜா தலைமையிலான அமைப்பும் விமான நிலையத்தில் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் எனக் கூறியுள்ளது.
 
இதன் காரணமாக சென்னையில் திட்டமிட்டிருந்த  மோடியின் பயணத்திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
காலை 9.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் மோடி, ஹெலிகாப்டர் மூலம் மகாபலிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் தரையிறங்குவார். பின்னர் சாலை மார்க்கமாக நந்தம்பாக்கம். வழியெங்கும், கட்அவுட்டுகள், தோரணங்கள் வைத்து வரவேற்பு என்பது திட்டம்.
 
ஆனால், கருப்பு கொடி அறிவிப்பு வெளியானதும், நந்தம்பாக்கம் வரை ஹெலிகாப்டர் என்று மாற்றப்பட்டது. அடுத்தாக 12.40க்கு கிளம்பி சாலை மார்க்கமாக அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட் நிகழ்வு. கருப்புக் கொடி காரணமாக சாலை வழியாக வருவது தவிர்க்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஹெலிபேட் என்று முடிவெடுக்கப்பட்டது.
 
அண்ணா பல்கலைக்கழகத்தில் வந்து இறங்கி, அங்கிருந்து எதிரில் இருக்கும் கேன்சர் மருத்துவமனைக்கு சாலை மார்க்கமாக என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சாலையில் வந்தால், அந்த இடத்திலேயே கருப்புக் கொடி காட்டுவார்கள் என்று அதுவும் ரத்து செய்யப்பட்டது. கேன்சர் மருத்துவமனைக்கு அடுத்த காம்பவுண்டில் இருக்கும் ஐஐடியில் தற்போது ஹெலிபேட் அமைக்கப்பட்டு உள்ளது.

 
இப்படி பல மாற்றங்கள் மோடி பயண திட்டத்தில் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதிபடுத்தும் வகையில், சென்னை ஐ.ஐ.டியில் சுவரை இடித்து அமைக்கப்பட்டுள்ள புதிய ஹெலிபேட் தளத்தின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. 
 
கருப்புக் கொடிக்கெல்லாம் மோடி பயப்பட மாட்டார். தீவிர நாடான பாகிஸ்தானுக்கே தைரியாமாக சென்றவர் மோடி என தமிழிசை கூறியிருந்தார். ஆனால், இப்படி பயந்து பல திட்டங்களை மாற்றியுள்ளனர் என சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்