கோடை வெயில் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் மசினகுடி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 50 பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் கால்நடை வளர்ப்போர் மத்தியில் கவலையும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மலைப்பிரதேசங்களிலும் கோடை வெயில் தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கூடலூர், மசினகுடி, முதுமலை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. வனத்தில் பசுந்தீவனங்கள் இல்லாததால் கால்நடைகள், வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் நீர் நிலைகளும் வறண்டு விட்டது. இதனால் போதிய சத்துக்கள் கிடைக்காமல் மசினகுடி பகுதியில் உள்ள விவசாயிகள் பால் உற்பத்தியாளர்களின் பசுமாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக சுமார் 50 பசு மாடுகள் உயிரிழந்துள்ளது. மேலும் கோடை மழையும் இதுவரை பெய்யாமல் உள்ளதால் கால்நடை வளர்ப்போர் மத்தியில் கவலையும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது.