மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தின் கடலோரப்பகுதிகள், தற்போது 100க்கும் மேற்பட்ட சிங்கங்களின் வாழ்விடமாக திகழ்கிறது. சிங்கங்களின் இயற்கை வாழ்விடம் சுருங்கிவருவதையே இது உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆசிய சிங்கங்களின் ஒரே இயற்கை வாழ்விடமான குஜராத்தின் கிர் வனப்பகுதியில், 2020ஆம் ஆண்டில் சுமார் 400 சிங்கங்கள் இருந்ததாக, மாநில வனத்துறையின் புள்ளிவிவரம் கூறுகிறது. குஜராத் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் 275 சிங்கங்கள் உள்ளன. அவற்றில் 104 சிங்கங்கள் 300 கி.மீ நீள (186 மைல்கள்) கடலோர பகுதிகளில் பரவியுள்ளன.
சிங்கங்களின் இயற்கை வாழ்விடம் சுருங்கி வருவதாலேயே வழக்கத்திற்கு மாறாக சிங்கங்கள் கடலோர பகுதிகளை நோக்கி இடம்பெயருவதாக, சூழலியல் பாதுகாப்பாளர்கள் கூறுகின்றனர்.
"கடற்கரை பகுதிகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்வது பொதுவாக சிங்கங்களுக்குக் கடினமானது. ஆனால், இடப்பற்றாக்குறையால் சிங்கங்கள் வேறு வழியில்லாமல் உள்ளன" என, வன உயிரியல் அறிஞர் டாக்டர் நிஷித் தாரியா கூறுகிறார்.
சிங்கங்கள் ஒருகாலத்தில் குஜராத் முழுதும் பரவியிருந்தன. ஆனால், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வேட்டை மற்றும் வறட்சி காரணமாக, சிங்கங்களின் எண்ணிக்கை டஜன் கணக்காக குறைந்தன.
அப்போதிலிருந்து வறட்சியான, இலையுதிர் கிர் காட்டில் சிங்கங்களின் எண்ணிக்கையை உயர்த்த பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கிர் சரணாலயத்தின் நிலப்பரப்பு மிகவும் சுருங்கிவிட்டதாக, பல்வேறு நிபுணர்கள் பல ஆண்டுகளாக கூறிவருகின்றனர்.
குஜராத்தில் உள்ள சிங்கங்கள் வாழ்விட மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாழ்விட போர் காரணமாக 1990களில் சிங்கங்கள் கடலோர பகுதிகளை நோக்கி வர ஆரம்பித்ததாக, வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
"ஒரு சிங்கம் வாழ்வதற்கு அதற்கு சுமார் 100 சதுர கி.மீ (38 சதுர மைல்) நிலப்பகுதி தேவை, தன் குட்டிகளுடன் வாழும் 3-4 பெண் சிங்கங்களும் இதே நிலப்பகுதியில் அடங்கும். ஒரு சிங்கக்குட்டி வளர்ந்தபிறகு, மூத்த சிங்கத்திடமிருந்து அந்த நிலப்பகுதியை கைப்பற்றிக்கொள்ளும் அல்லது, புதிய நிலப்பகுதியை கண்டுபிடிக்க சிங்கக்கூட்டத்திலிருந்து வெளியேறிவிடும்," என்கிறார் குஜராத் வனத்துறை உயர் அதிகாரி ஷ்யாமள் தீகாதர்.
சிங்கங்கள் ஹெரான் நதி வாயிலாக கடலோரப் பகுதிகளை அடைகின்றன, இந்த நதி கிர் காடு வழியாகச் சென்று சோம்நாத் மாவட்டத்தில் அரபிக்கடலைச் சந்திக்கிறது.
அதாவது, கிர் காட்டில் இருந்து 80 கி.மீ (50 மைல்) தொலைவில் உள்ள வெராவல் மாவட்டத்தில் கடலோரத்தில் ஒரு பண்ணை வீடு வைத்திருக்கும் உதய் ஷா போன்றவர்கள் இப்போது கடற்கரையில் சிங்கங்களைத் தொடர்ந்து பார்க்கப் பழகிவிட்டனர்.
"ஆரம்பத்தில் சிங்கங்களை பார்க்கும்போது நாங்கள் பயந்தோம், ஆனால், இப்போது அவை எங்களை தொந்தரவு செய்வதில்லை," என்கிறார் அவர்.
வாழ்விடப் போர் காரணமாக சிங்கங்கள் கடற்கரை பகுதிகளை நோக்கி வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
வெரவல் மலைத்தொடரின் வன அதிகாரி ஹெச்.டி. கல்சார், கடந்த சில ஆண்டுகளாக கடலோரப் பகுதியில் சுமார் 7 சிங்கங்கள் அடங்கிய சிங்கக்கூட்டம் வாழ்வதாக தெரிவித்தார். சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்ட வனத்துறையினர் கடலோரப் பகுதிகளில் இலையுதிர் கம் அரபு மரங்களை (அகாசியா மரங்களை) நடத் தொடங்கினர் என்று அவர் கூறுகிறார்.
வெராவல் கடற்கரைக்கு எதிரே, இப்போது ஒரு மெல்லிய கீற்றுகள் கொண்ட அரபு மரங்கள் உள்ளன, அங்குதான் சிங்கங்கள் வாழ்கின்றன.
சில சமயங்களில், கடலோரப் பகுதிகளைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளில் காட்டுப்பன்றிகள் மற்றும் நீல்காய் எனப்படும் மான்களை அச்சிங்கங்கள் வேட்டையாடும் என்று கால்சார் கூறுகிறார்.
ஆனால், அச்சிங்கங்களுக்கு இரை கிடைக்காவிட்டால், அருகாமையிலுள்ள கிராமங்களுக்குச் சென்று ஆடுகள் மற்றும் மாடுகளை கொன்றுவிடும்.
சோம்நாத் மாவட்டத்தின் ஹெரான் ஆற்றின் அருகே மாம்பழ பண்ணை வைத்திருக்கும் நதா பர்மார், கடந்த சில ஆண்டுகளில் சிங்கங்கள் தன்னுடைய 10 கன்றுகளை கொன்றுவிட்டதாக கூறுகிறார்.
இருமல் மருந்துக்காக வேட்டையாடப்படும் முள்ளெலி - என்ன ஆபத்து?
அவரும் மற்ற கிராமத்தினரும் ஆரம்பத்தில் இதற்காக கோபம்கொண்டனர். ஆனால், இதில் எதிர்பாராத பயன் இருப்பதை அவர்கள் பின்னர் உணர்ந்தனர்.
"நாங்கள் ஆரம்பத்தில் கூட்டமாக வரும் காட்டுப் பன்றிகள் மற்றும் நீல காளைகளை சமாளிக்க வேண்டியிருந்தது, அவை எங்களின் பயிர் முழுவதையும் நாசமாக்கிவிடும். ஆனால், இப்போது அது முற்றிலும் நின்றுவிட்டது," என்கிறார் அவர்.
தற்போது வரும் மற்ற விவசாயிகளும் சிங்கங்களிடத்தில் எச்சரிக்கையுடனும் மரியாதையுடனும் வாழ கற்றுக்கொள்கின்றனர். இதனால், தற்போது வரை அப்பகுதியில் உள்ள எந்தவொரு மனிதரையும் அச்சிங்கங்கள் தாக்கவில்லை.
'நாங்கள் சிங்கங்களை எதிர்கொள்ள நேரிட்டால், நாங்கள் நின்றுவிட்டு அவற்றுக்கு வழிவிடுவோம் அல்லது அவற்றை தொந்தரவு செய்யாமல் எங்களின் வழியை மாற்றிக்கொள்கிறோம்," என்கிறார்.
கடலோர பகுதிகளில் வாழும் சிங்கங்களை வனத்துறை சார்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறார் ஜீனாபாய்.
வனத்துறைக்காக கடற்கரை பகுதிகளில் சிங்கங்களை தொடர்ச்சியாக கண்காணித்துவரும் ஜீனாபாய், சிங்கங்களுக்கு ஏற்ப இந்த பகுதியில் உள்ள மக்கள், கிர் காட்டை சுற்றியுள்ள மனிதர்கள் எவ்வாறு முன்பு தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டனரோ, அதேபோன்று இவர்களும் தங்களின் வாழ்வியலை தகவமைத்துக்கொண்டனர் என்று கூறுகிறார்.
"சில சமயங்களில் சிங்கங்கள் அருகாமை காடுகள் அல்லது குடியிருப்புப் பகுதிகளுக்கு வேட்டையாடுவதற்காக செல்லும், அதன்பின் அவை ஓய்வெடுக்க இங்கு திரும்பி வந்துவிடும். இந்த வாழ்விடத்திற்கு அவை தங்களை தகவமைத்துக்கொண்டன" என்கிறார் அவர்.
குஜராத்தில் உள்ள சிங்கங்கள் சூழலுக்கு ஏற்றவாறு, வாழ்விடத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் தங்களை தகவமைத்துக்கொள்வதாக, வன உயிரியல் நிபுணர் ராஜன் ஜோஷி தெரிவித்தார். அவர்கள் கிர் பகுதியில் மனிதர்களுக்கு அருகாமையில் வாழப் பழகிவிட்டார்கள் என்று அவர் கூறுகிறார், பின்னர், எண்ணிக்கை வளர வளர திறந்தவெளிகளிலும் வாழ தகவமைத்துக்கொண்டதாக கூறுகிறார்.