பள்ளி நண்பருடன் கள்ளக்காதல்; வழக்கறிஞர் கூலிப்படை மூலம் கொலை - மனைவி வாக்குமூலம்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (11:47 IST)
பள்ளி நண்பருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் வழக்கறிஞர் முருகனை கூலிப்படை மூலம் கொலை செய்ததாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

 
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மேலும் முருகன் திரையுலக பிரமுகர்களுக்கும் வழக்கறிஞராக செயல்பட்டு வந்துள்ளார்.
 
இந்நிலையில், குடிபெயர்வதற்காக கோடம்பாக்கம் பகுதியில் வீடு பார்க்க சென்றபோது 2 மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் முருகனை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி சிதைத்தனர். முருகன் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார்.
 
இச்சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்கள் கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். இதையடுத்து கோடம்பாக்கம் காவல் துணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
 
கொலை நடந்த பகுதியில் அருந்த இருந்த வங்கியின் சிசிடிவி கேமரா மூலம் காவல்துறையினர் கொலையாளிகளை கண்டறிய முயற்சி செய்தனர். ஆனால் அவர்களின் உருவம் சரியாக தெரியவில்லை.
 
இதைத்தொடர்ந்து முருகனின் மைத்துனர் கோடம்பாக்கம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
 
இந்நிலையில்தான் முருகன் செல்போனுக்கு வந்த கடைசி அழைப்பை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த எண் முருகனின் மனைவி லோகேஸ்வரியின் எண் எனத் தெரிய வந்தது.
 
இதையடுத்து காவல் துறையினர் லோகேஸ்வரியிடம் தீவிர விசாரனை மேற்கொண்டனர். அப்போது அவர், தானும், முருகனும் காதல் திருமணம் செய்துகொண்டதாகவும், சிறிது காலத்திலேயே தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதற்கிடையில், தன்னுடன், பள்ளியில் படித்த சண்முகநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
 
பின்னர், கள்ளக்காதல் விவகாரம் முருகனுக்கு தெரியவந்ததாகவும், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த முருகனை கொலை செய்ய முடிவு செய்து, வாடகைக்கு வீடு பார்க்கும் நேரம் பார்த்து முருகனை கொலை செய்வதற்கு நேரம் பார்த்து கூலிப்படையை ஏவி முருகனை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.
 
இந்த கொலையில் சம்பந்தப்பட்ட கள்ளக்காதலன் சண்முகநாதனும் தலைமறைவாக உள்ளதை அடுத்து அவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். முருகனின் மனைவி லோகேஸ்வரி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்