கமலுடன் கை கோர்க்கலாமா; காங்கிரஸுக்கு டாட்டா சொல்லலாமா: குழப்பத்தில் குஷ்பு!

ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (13:22 IST)
திமுகவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய நடிகை குஷ்பு அங்கு ஓரம் கட்டப்பட்டதால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியிலும் ஓரம் கட்டப்படுவதால் நடிகர்கள் கமல், ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் சேரலாமா என குஷ்பு யோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
திமுகவிலிருந்து வெளியேறிய குஷ்பு முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் ஏற்பாட்டில், டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியும் பெற்றார்.
 
தொடக்கத்தில் மாநில தலைவர் இளங்கோவனுடன் சேர்ந்து கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த குஷ்பு, அவரது தலைவர் பதவி மாற்றத்துக்கு பின்னர் கட்சி பணிகளில் அதிக ஈடுபாடு இல்லாமல் படப்பிடிப்பு, வெளிநாடு சுற்றுலா போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தார்.
 
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில், திருநாவுக்கரசர் கோஷ்டி குஷ்புவை ஓரங்கட்டியதாக கூறப்படுகிறது. குஷ்பு தீவிர உறுப்பினராக தேர்வு செய்யப்படாததால் கட்சியின் பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் உள்ளார்.
 
மேலும், மாநில பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் குறிப்பிட்ட தேதிக்குள் இணையதளத்திலிருந்து இறக்கம் செய்யும் மனுவில் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால் குஷ்பு விண்ணப்பிக்காமல் வெளிநாட்டிற்கு சென்றதால் மாநில பொதுக்குழு உறுப்பினர் பதவியும் இல்லாத நிலை உருவாகி உள்ளது.
 
இதனால் காங்கிரசில் கட்சியில் நீடிப்பது குறித்து குஷ்பு ஆலோசித்து வருவதாகவும். ரஜினியோ, கமலோ கட்சி ஆரம்பித்தால், அந்த கட்சியில் இணைந்து விடலாம் என குஷ்பு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்