அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே..! ரஜினிக்கு ஆன்மீக வகுப்பெடுத்த கே.எஸ்.அழகிரி
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (19:27 IST)
அமித்ஷாவையும், மோடியையும் அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணராக பாவித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
நேற்று சென்னையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்திற்கான வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் அமித்ஷா, முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் விவகாரத்தில் பாஜக எடுத்த முடிவுக்கு தனது வாழ்த்துக்களை கூறியதுடன், பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் மஹாபாரதத்தில் வரும் கிருஷ்ணன், அர்ஜுனன் போன்றவர்கள் என சிலாகித்து பேசினார்.
நடிகர் ரஜினியின் இந்த பேச்சுக்கு திருமாவளவன், கனிமொழி ஆகியோர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரஜினிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
அதில் அவர் “காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை ரஜினி புகழ்ந்து பேசியிருப்பது வருத்தமளிக்கிறது. ரஜினி இயல்பிலேயே நல்ல மனிதர். ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டவர். அவர் இப்படி பேசியிருப்பது ஆன்மீக உணர்வு என்பது மத உணர்வு என ரஜினி தவறாக புரிந்து கொண்டிருக்கிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
ஆன்மீகம் மதம் சார்ந்தது அல்ல. நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் மீது நம்பிக்கை கொண்டு ஒழுக்கமான, நேர்மையான வாழ்க்கையை வாழ்வதுதான் ஆன்மீகம். மதம் என்பது குறிப்பிட்ட கடவுளை கொண்டு, சடங்குகளை கொண்டு, பிற மதத்தவர்களை விரோதியாக பார்க்கும் நிலையாகும்.
இன்றைக்கு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியிருக்கும் பிரதமரும், அமித்ஷாவும் இமாச்சல பிரதேசத்தையும், வடக்கிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களும் இதே சிறப்பு அந்தஸ்தை கொண்டிருப்பதை நீக்காதது ஏன்?
அநீதியை கண்டு சிலிர்க்கும் நாயகர் காஷ்மீருக்கு ஒரு நீதி, இமாச்சலத்துக்கு ஒரு நீதி என்பதை ஏற்கிறாரா? பிஅரதமரையும், அமித்ஷாவையும் கிருஷ்ணன், அர்ஜுனன் என்று ரஜினி சொல்கிறார். ஆனால் அவர்கள் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள். பல கோடி மக்களின் வாழ்க்கையை கெடுத்தவர்கள் எப்படி அர்ஜுனனும், கிருஷ்ணனுமாக இருக்க முடியும். ஆகவே, அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே மஹாபாரதத்தை தயவு செய்து திரும்பவும் படியுங்கள்” என கூறியுள்ளார்.