போலீஸிடம் மன்னிப்பு கேட்ட கலெக்டர் – அத்திவரதர் வைபவத்தில் சலசலப்பு

திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (12:23 IST)
அத்திவரதர் தரிசனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை திட்டியதற்காக கலெக்டர் பொன்னையா தனது வருத்தங்களை தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடந்து வரும் அத்திவரதர் தரிசனத்தை காண பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பு பணிகளுக்காக பல ஊர்களிலிருந்தும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அத்திவரதர் தரிசனம் நடைபெறும் இடத்தின் அருகே ஒரு இன்ஸ்பெக்டரை காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா ஒருமையில் திட்டும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பல்வேறு மன மற்றும் உடல் சுமைகளையும் தாங்கி கொண்டு இரவு பகலாக பாதுகாப்பு தரும் காவலர்களை பொது இடத்தில் இப்படி மரியாதை குறைவாக நடத்தலாமா என பலர் கேள்வி எழுப்பினர். இதனால் அத்திவரதர் தரிசன பணிகளுக்கு செல்லாமல் எதிர்ப்பை காட்டவும் சிலர் முயன்றனர்.

இந்நிலையில் தன் தவறை ஒப்புக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் “உணர்ச்சிவசத்தால் பேசிய வார்த்தைகளை பெரிதுப்படுத்த வேண்டாம். பாதுகாப்பு பணிகளில் காவலர்கள் வெகு சிறப்பாய் செயல்படுகிறார்கள். நாங்கள் ஒரு குடும்பமாக இணைந்து பணிபுரிந்து வருகிறோம்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்