தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா?: காவிரி விவகாரத்தில் கொந்தளித்த கவிக்கோ

திங்கள், 12 செப்டம்பர் 2016 (15:41 IST)
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதை கண்டித்து கர்நாடகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழர்களை எச்சரித்தும், கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியும் வந்தனர் அம்மாநிலத்தில் உள்ள போராட்டக்காரர்கள்.


 
 
இதனையடுத்து இதனை கண்டித்து தமிழகத்திலும் கன்னடர்கள் மீதும், அவர்களது உரிமைகள் மீதும் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். தற்போது இரு மாநிலத்திலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஒருவரை ஒருவர் தாக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
 
இந்நிலையில் காவிரி பிரச்சனையில் இரு மாநிலத்தவரும் நடந்துகொள்ளும் விதத்தை பார்த்து தன்னுடைய கோபத்தை இந்தியா ஒரே நாடா? என்ற கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பிரபல கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான். அந்த கவிதை பின்வருமாறு:
 
ரத்தம்
எனக்கு மட்டும்தான்
சொந்தம் என்று
இதயம் சொன்னால்
உடல் என்ன ஆகும்?
 
திருமணமான பிறகும்
பெண்
பிறந்தகத்தில்தான்
இருக்கவேண்டும்
என்று சொன்னால்
கணவன் கதி என்ன?
 
எனக்கொரு சந்தேகம்
கர்நாடகம்
இந்தியாவில்தான் இருக்கிறதா?
 
தமிழ்நாடும்
இந்தியாவில்தான் இருக்கிறதா?
 
இந்தியா என்பது
ஒரே நாடுதானா?

வெப்துனியாவைப் படிக்கவும்