சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் அதிமுக இரண்டாக உடைந்து, சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என பிரிந்தது. ஆனாலும், பெரும்பாலான எம்.எல்.ஏக்களை சசிகலா தரப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காரணத்தால், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகியுள்ளார்.
இந்த புகார் மனுவுக்கு சசிகலா தரப்பில் இருந்து பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு அவர் தற்போது இருக்கும் பெங்களூர் சிறை முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு சசிகலாவால் அவசரகதியில் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் சமிபத்தில் பதில் அனுப்பியிருந்தார். ஆனால் இந்த பதில் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக சசிகலாவிற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜி தனது முகநூல் பக்கத்தில் “ சசிகலாவின் ஆதரவாளரை சட்ட மன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்ததன் மூலம், அதிமுக தனக்குத் தானே குழி தோண்டிக் கொண்டுள்ளது. தற்போது தேர்தல் நடைபெற்றால், சந்தேகமே இல்லாமல் திமுக மாபெரும் வெற்றி பெறும். அதிமுக படுதோல்வி அடையும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.