மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கு..! மே 28-க்கு விசாரணை ஒத்திவைப்பு.!!

Senthil Velan

செவ்வாய், 14 மே 2024 (15:56 IST)
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்குத் தொடர்பான மறு விசாரணை மே 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் விடுதியில் தங்கி +2 படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி பள்ளியில மர்மமான முறையில் மாணவி உயிரிழந்தார்.
 
ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்ற  விசாரணையின்போது, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பு கேமரா பதிவு, மாணவியின் செல்போன் உரையாடல், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட விவரங்களை வழங்க மாணவி தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் வழக்கில் சேர்க்க வலியுறுத்தி மாணவி தரப்பில் வக்காலத்து தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை மே-14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி வழக்கு இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்த போது, பள்ளித் தரப்பிலிருந்து தாளாளர், பள்ளி செயலாளர், பள்ளி முதல்வர் ஆஜராகினர். 

ALSO READ: விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிப்பு.! மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு..!!
 
மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாப்பா மோகன், கடந்த விசாரணையின்போது, கோரிய கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பு கேமரா பதிவு, மாணவியின் செல்போன் உரையாடல், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட விபரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் தேவசந்திரன், கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து வழக்கை மே மாதம்  28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்