"காமராஜர் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவாவுக்கு பதிலடி கொடுக்காவிட்டால், காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது" என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
பெருந்தலைவர் காமராஜர் நேர்மைக்கும், நிர்வாகத்திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர் போனவர் என்பதை உலகறியும். தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும், ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை.
காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது, அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு.