அகற்றப்பட்ட காமராசர் பெயர்பலகை: சீமான் விடுத்த வேண்டுகோள்!

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (10:02 IST)
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அகற்றப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராசர் பெயர்ப்பலகையை மீண்டும் நிறுவிட வேண்டும் என சீமான் கோரிக்கை. 

 
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பெருந்தலைவர் காமராசர் பெயர் பொறித்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, மீண்டும் நிறுவப்படாமல் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது என சீமான் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
பெருந்தலைவர் காமராசர் புகழினை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்திலேயே இத்தகைய மறைப்பு வேலைகள் ஆளும் அரசுகளால் திட்டமிட்டுச் செய்யப்படுவதாக ஐயம் எழுகிறது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்பட்டு அவரது பெயர் பொறித்த விமான நிலையப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்த நிலையில், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி பெயர்ப் பலகையானது அங்கிருந்து அகற்றப்பட்டுப் பல ஆண்டுகளாகியும், இதுவரை மீண்டும் நிறுவப்படாமல் இருப்பது தமிழக மக்களிடம் பெரும் மனக்குறையையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
அதுமட்டுமின்றி, விமான அறிவிப்புகள் மற்றும் விமானப் பயணச் சீட்டுக்களில் பெருந்தலைவர் காமராசர் அவர்களது பெயர் புறக்கணிக்கப்பட்டு வெறும் உள்நாட்டு விமான நிலையம் என்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தற்போது பதிவு செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 
ஒன்பது ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து, கல்வித்துறை, நீர் மேலாண்மை மற்றும் தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பல சீரியத் திட்டங்களைத் தீட்டி தன்னலமற்று தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் சேவை புரிந்து, தூய அரசியல் சேவைக்கு இன்றளவும் ஈடு இணையற்ற சான்றாகத் திகழும் பெருந்தலைவர் காமராசர் அவர்களது புகழைப் பறைசாற்றும் வகையில் யாதொரு நினைவுச் சின்னமும் இதுவரை தமிழ்நாட்டில் அமைக்கப்படவில்லை என்பது மிகப்பெரிய குறையாகும்.
 
இந்நிலையில் இருக்கும் ஒன்றிரண்டு அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியில் இந்திய ஒன்றிய அரசும் மற்றும் தமிழ்நாடு அரசும் ஈடுபட்டிருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஆகவே, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் உள்ள பெருந்தலைவர் காமராசர் பெயர் பொறித்த பெயர்ப் பலகையை உடனடியாகத் திறக்க வேண்டுமெனவும், பெருந்தலைவர் காமராசர் உள்நாட்டு விமானநிலையம் என்பதனை பயணச் சீட்டு மட்டும் அறிவிப்புகளில் மீண்டும் முழுமையாகப் பதிவு செய்ய வேண்டுமெனவும் இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்துகிறேன். 
 
மேலும், பொதுமக்களளின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று உள்நாட்டு விமானநிலைய வளாகத்திற்குள் பெருந்தலைவர் காமராசர் சிலையை நிறுவி, அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் பெருந்தலைவர் காமராசர் பெயரையே சூட்டவும் தமிழ்நாடு மற்றும் இந்திய ஒன்றிய அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்