கடந்த வருடம் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். பல்வேறு ஊர்களுக்கு சென்று அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து வருகிறார்.
சமீபத்தில் கஜா புயல் ஏற்பட்டபோது, டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் மக்களின் குறைகளை கேட்டறிந்து தன்னால் ஆன உதவியை செய்தார். பல மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக சென்று மக்களை சந்தித்து தனது அரசியல் வருகையை ஆணித்தரமாக பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி அலுவலகத்தை திறந்துவைத்த பின் பேசிய அவர் மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும்? என கேள்வி எழுப்பினார். சர்கார் பட பிரச்சனையின் போதே இலவசங்கள் குறித்து தைரியமாக கமல் பேசியது ஆளும்கட்சியினரை எப்படி கோபத்திற்கு ஆளாக்கியதோ தற்பொழுதும் கமல் இலவசம் குறித்து பேசியிருப்பது ஆளும்கட்சியினரை கொந்தளிப்படைய செய்துள்ளது.