களம் இறங்கும் கமல்ஹாசன் - இம்மாத இறுதிக்குள் அரசியல் பிரவேசம்?

புதன், 13 செப்டம்பர் 2017 (12:29 IST)
நடிகர் கமல்ஹாசன் இம்மாத இறுதிக்குள் தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பார் என பிரபல நாளிதழ் ‘ தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.


 

 
நடிகர் கமல்ஹாசன், சமீப காலமாக சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துகளை தனது டிவிட்டர் பக்கம் மற்றும் பேட்டிகளில் தெரிவித்து வருகிறார். இதனால், அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக தனக்கு நெருக்கமான அரசியல்வாதிகளிடம் விவாதித்து வருவதாகவும், இதுபற்றி விரைவில் அறிவிப்பேன் எனவும் கமலஹாசன் பேட்டியளித்தார். 
 
இந்நிலையில், பிரபல நாளிதழான ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் கமல்ஹாசன் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். வருகிற ஆயுத பூஜையன்று அதுபற்றிய அறிவிப்பை அவர் வெளியிட வாய்ப்பிருக்கிறது என கமல்ஹாசனுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தனது அரசியல் கட்சியை அவர் பலப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும், இதுபற்றி தனக்கு மிகவும் நெருக்கமான தனது நற்பணி மன்ற நிர்வாகிகளிடம் மட்டும் அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.


 

 
தனது கருத்துகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பில் மகிழ்ச்சி அடைந்துள்ள கமல்ஹாசன், அரசியல் கட்சியை துவங்குவதற்கு இதுவே சரியான காரணம் என நினைக்கிறார் எனவும், தமிழகத்தின் முக்கிய கட்சிகள் பெரிய கூட்டணியை அமைக்கும் முன்பாக, தனது கட்சியை துவங்குவது எதிர்காலத்திற்கு நல்லது எனவும் அவர் கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.
 
அதோடு, நற்பணி மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள், தனக்கு நெருக்கமான அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள் ஆகியோரோடு அவர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் எனவும், இந்த மாத இறுதிக்குள் அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முக்கியமாக, உள்ளாட்சி தேர்தலில் தனது நற்பணி மன்றத்தினரை களம் இறக்கி, அடிமட்ட அளவுக்கு கட்சியை அவர் கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், அதன் மூலம் தமிழக மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் நம்புவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்