கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்: எச்சரிக்கும் தினகரன் தரப்பு!

சனி, 6 ஜனவரி 2018 (18:22 IST)
நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதை நடிகர் கமல் கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து கமலுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது அதிகமான பணப்பட்டுவாடா நடந்ததாக பரவலாக குற்றச்சாட்டுகள் வந்தன. தினகரன் தரப்பு வெற்றி பெற்றால் பத்தாயிரம் ரூபாய் வீதம் ஒரு ஓட்டுக்கு தருவதாக 20 ரூபாய் டோக்கன் வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் வந்தன.
 
தினகரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து இது பணத்தால் பெற்ற வெற்றி என விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் பத்திரிகை ஒன்றில் தொடர் எழுதி வரும் நடிகர் கமல் தினகரனின் ஆர்கே நகர் இடைத்தேர்தல் வெற்றியை கடுமையாக விமர்சித்தார்.
 
அதில் கமல் வேட்பாளரை திருடன் எனவும், வாக்காளர்களை பிச்சைக்காரர்கள் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தினகரன் ஆதரவாளரான புகழேந்தி கமலை கடுமையாக சாடியுள்ளார்.
 
அதில், தினகரன் வெற்றிக்காக, வாழ்த்து சொல்ல மனதில்லை என்றால் பரவாயில்லை. திருடன் என்பதும், வாக்காளர்களை பிச்சைக்காரன் என்பதும் சரியல்ல. சசிகலாவோ, தினகரனோ உத்தரவிட்டால் கமலை எதிர்த்து பெரிய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். உடனடியாக கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்