வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மார்ச் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 8:30 வரை வருமான வரி சோதனை நடைபெற்றது. அதையடுத்து ஒருநாள் இடைவெளியில் இன்று மீண்டும் துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் கொடவுனில் நடத்தப்பட்ட சோதனையில் மூட்டை மூட்டையாகப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் வேலூர் தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக அனுப்பவேண்டிய விவரங்களும் அதன் கவர்களில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது சம்மந்தமாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதனால் வாக்குகளுக்குப் பணம் கொடுத்ததாக வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தகுதிநீக்கம் செய்யப்படுவாரா அல்லது வேலூர் தொகுதிக்கே தேர்தல் நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனிடம் கேள்வி கேட்கப்பட்ட போது ‘பிடிபட்டவர்கள் சோதனையை மிரட்டல் என சொல்கிறார்கள். வருமான வரித்துறையினரின் சோதனை தப்பு செய்தவர்களுக்கு திகில் அளிக்கும் விஷயம்தான். இதில் சோதனை செய்தவர்களும் செய்யப்பட்டவர்களும் உத்தமர்கள் இல்லை’ எனத் தெரிவித்தார்.