நீதிபதி கோபமடையும் அளவிற்கு அப்படியென்ன சந்தேகம் கிளப்பினார் அதிமுக உறுப்பினர்?

வெள்ளி, 30 டிசம்பர் 2016 (02:27 IST)
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையில், "மத்திய அரசின் பிரதிநிதிகள் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியுமென மத்திய அரசின் வழக்கறிஞர் கூறுகிறார். ஆனால், இது தொடர்பான எந்தத் தகவலும் வெளியிடப்படாதது ஏன்" என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


 

மேலும், "ஜெயலலிதா குணமடைந்து வருவதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியாகிவந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆவணங்களில் கையெழுத்திட்டார், கூட்டங்களை நடத்தினார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதனால் எங்களுக்கே சந்தேகம் ஏற்படுகிறது" என்று நீதிபதிகள் கூறினர்.

நீதிபதிகளுக்கே இந்தளவிற்கு சந்தேகம் வரும் அளவிற்கு, அதிமுக உறுப்பினர் ஜோசப் ஜெயலலிதாவின் மரணத்தில் என்னென்ன சந்தேகங்களை கிளப்பினார்? விவரம் கீழே:

கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் கூறி வந்தது. எல்லா தகவல்களும் ஜெயலலிதா நன்றாக உள்ளார்;

விரைவில் வீடு திரும்புவார் என்றே கூறி வந்தன. இதை உறுதி செய்யும் விதமாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி. ரெட்டியும் ஜெயலலிதாவின் உடல் உறுப்புகள் சரியாக செயல்படுகின்றன; இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவதாக கூறினார்.

டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக கூட எய்ம்ஸ் மருத்துவர்கள், அவர் நன்றாக இருப்பதாக பேட்டி அளித்தனர்.

டிசம்பர் 5ஆம் தேதி மாலை ஜெயலலிதா இறந்துவிட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஆனால் அன்றிரவு 11.30 மணிக்கு அவர் இறந்து விட்டார் என அறிவிக்கப்பட்டது.

இது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன், என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது அவருடைய கால்கள் அகற்றப்பட்டும், அவரது உடல் பதப்படுத்தப்பட்டும் இருந்ததாக கூறப்படுகிறது;

டிசம்பர் 5-ஆம் தேதி இரவு இறந்த ஜெயலலிதா உடல் மறுநாளே அடக்கம் செய்யப்படுகிறது எனும்போது, எதற்காக அவரது உடலை பதப்படுத்த வேண்டும் என்றும், இறப்பதை அறிவிக்கும் முன்பாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஏன் பதவியேற்க வேண்டும் என்றும் கேள்விகள் வருகின்றன.

எனவே, இதுபோன்ற சந்தேகத்துக்குரிய பல்வேறு நிகழ்வுகள் இருப்பதால், நேதாஜி மரணம் தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது போல, ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகளை வெளிப்படுத்தவும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும்.

மேலும், இந்த வழக்கு முடியும் வரை, ஜெயலலிதாவின் சிகிச்சை மற்றும் மரணம் தொடர்பான அறிக்கைகள், ஆவணங்கள், மருத்துவமனை அறிக்கைகள், அவரது கைரேகை உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க அவற்றை நீதிமன்றத்தில் தாக் கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்