கட்டுப்பாட்டை மீறிய நிர்வாகிகள், கழட்டி விடும் ஜெயலலிதா: அதிரடி ஆரம்பம்

வெள்ளி, 6 மே 2016 (18:34 IST)
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேரம், காலம் பார்க்காமல் பல அதிரடி முடிவுகளை எடுப்பவர். எத்தகைய பதவியில் இருந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களை நிர்மூலமாக்கிவிடுவார். தேர்தல் நெருங்கி விட்ட இந்த நேரத்திலும் கட்சியில் சில நிர்வாகிகளை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.


 
 
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடப்பதாலும், திருப்பூர், கோவை, மதுரை, அரியலூர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டுள்ளார் பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் சிலரை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
 
திருப்பூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடசாமி, கோவை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சால்ட் வெள்ளிங்கிரி, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல், சேதுராமன், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மணி ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்