தமிழக முதல்வராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று ஆறாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். தமிழக ஆளுநர் கே.ரோசய்யா ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழா 25 நிமிடங்களில் நடந்து முடிந்தது.
முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றதும் ஆளுநர் அவருக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக குழு, பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சமக தலைவர் சரத்குமார், நடிகர் சங்க தலைவர் நாசர், அதிமுக பேச்சாளர்கள் ஆர்த்தி, குண்டு கல்யான், ஆனந்தராஜ், பாடகி சுசீலா உள்ளிட்ட பல திரை உலகினர் கலந்து கொண்ட இந்த பதவியேற்பு விழா 12 மணிக்குத் தொடங்கி 12.25 மணிக்கு முடிவடைந்தது.
பதவியேற்பு முடிந்ததும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான 28 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஆளுநர் ரோசய்யா உடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் உடனடியாக தலைமை செயலகம் சென்ற ஜெயலலிதா, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.