போயஸ் கார்டன் வீட்டை இளவரசிக்கு எழுதி வைத்த ஜெயலலிதா: பரபரப்பு தகவலால் குழப்பம்!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2017 (18:03 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்போவதாக முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால் அந்த வீடு சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு ஜெயலலிதா எழுதி வைத்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.


 
 
ஜெயலலிதாவின் தாய் சந்தியாவும், ஜெயலலிதாவும் சேர்ந்து வாங்கிய வீடுதான் போயஸ் கார்டன் வேதா இல்லம். சந்தியாவின் மறைவிற்கு பின்னர் இந்த வீடு ஜெயலலிதாவின் பெயருக்கு வந்தது.
 
இந்த வீட்டில் ஜெயலலிதா தனது தோழி சசிகலா உடன் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது தோழி சசிகலா தனது குடும்ப சகிதம் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வருகிறார்.
 
இந்த வீட்டை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றப் போவதாக முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்ததும் இந்த வீட்டை இளவரசியின் பெயருக்கு ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.

 
நியூஸ் 18 தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. இந்த வீட்டை இளவரசி பெயருக்கு ஜெயலலிதா உயில் எழுதி வைத்தூள்ளார். இளவரசி, சசிகலாவின் அண்ணன் மனைவி ஆவார் என அதில் கூறப்பட்டுள்ளது.

 
ஆனால் கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த சொத்துக்கணக்கில் தனது பெயரில் தான் போயஸ் கார்டன் வீடு உள்ளது என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்