ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் : ஜெ.வின் நீண்ட நாள் தோழி டிவிட்டரில் செய்தி

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (13:38 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், அவர் விரைவில் குணமடைந்து வருகிறார் என்றும், மூத்த பத்திரிக்கையாளரும், முதல்வரின் நீண்ட கால நண்பருமான மாலினி பார்த்தசாரதி கருத்து தெரிவித்துள்ளார்.



 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.      
 
நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

அதேபோல், ஒருபக்கம் அவரது உடல்நிலை பற்றிய வதந்திகளும் பரவி வருகிறது. இந்த விவகாரம் அதிமுக விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியரும், மூத்த பத்திரிக்கையாளருமான மாலினி பார்த்தசாரதி தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வரின் உடல்நிலை குறித்து குறிப்பிட்டுள்ளதாவது:


 

 
“ஒரு மகிழ்ச்சியான செய்தி...முதல்வர் ஜெயலலிதா நிச்சயமாக குணமடைந்து வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்த, எனக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் கூறினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
முதல்வர் ஜெயலலிதாவிற்கு நீண்ட நாள் நண்பர் என்ற முறையில், இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதாக அவர் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்