ஆரோக்கியத்திற்காக அப்பல்லோவில் பூஜை செய்த ஜெயலலிதா?
திங்கள், 26 செப்டம்பர் 2016 (12:26 IST)
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று நம்பப்படும் துர்கா பூஜைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனையிலேயே செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 22ம் தேதி இரவு 10.30 மணி அளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலை சரியாகி விட்டது என்றும், வழக்கமான உணவுகளை அவர் எடுத்துக் கொள்கிறார் என்றும் மருத்துவமனை செய்தி வெளியிட்டுள்ளது. இருந்தாலும் அவர் இன்னும் வீடு திரும்பாமல், மருத்துவமனையிலேயே தங்கி இருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதனால், அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருக்கிறது என்றும், அதனால் அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்து கொள்ள இருக்கிறார் என்றும் செய்தி வெளியானது. ஆனால், அதிமுக மற்றும் மருத்துவ வட்டாரங்கள் அந்த செய்தியை மறுத்துள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை துர்கா பூஜை செய்தார் என்று செய்தி வெளியாகியிருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா, தெய்வ நம்பிக்கைகளிலும், பூஜைகளிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர். ராகு காலத்தில் செய்யப்படும் சில பூஜைகள் பயனை அளிக்கும் என்று ஆன்மீக வாதிகளால் கூறப்படுகிறது. அதுவும், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில், ராகு காலத்தில் செய்யப்படும் அம்மன் வழிபாடு, சிறந்த பலன்களை அளிக்கும் என்று ஜோதிடர்களால் கூறப்பட்டு வருகிறது.
எனவே, தீராத நோய்களை தீர்க்கும் சத்தி உடையதாக கூறப்படும் துர்க்கை வழிபாட்டை, முதல்வர் ஜெயலலிதா கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரையான ராகுகாலத்தில், அப்பல்லோ மருத்துவமனையிலேயே செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
துர்க்கை மந்திரம் ஜெயலலிதாவிற்கு அத்துப்படி. எனவே அந்த ஒன்றரை மணி நேரத்தில் அந்த மந்திரத்தையே கண்கள் மூடிய படி கூறிக்கொண்டிருந்தாராம். சசிகலாவும், இளவரசியும் அவர் முன் அமைதியாக அமர்ந்திருந்தார்களாம்...
அந்த பூஜை முடிந்த பின் தான், தன்னுடைய உடல்நிலை பற்றிய விளக்கத்தை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளார் ஜெயலலிதா என்ற தகவல் வெளியாகியுள்ளது.