’பிக்பாக்கெட்’ என்று சொன்னால் அது ஓபிஎஸ்தான்! – ஜெயக்குமார் தாக்கு!

ஞாயிறு, 19 மார்ச் 2023 (11:50 IST)
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தடை கோரியுள்ளது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்தி பொதுச்செயலாளராக முயற்சித்து வருகிறார். இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த அனுமதிக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டு வருகிறது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்தவருமான ஜெயக்குமார் “அதிமுகவின் நலனுக்காக ஓ.பன்னீர்செல்வம் எந்த காலத்திலும் செயல்பட்டது இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆட்சியை கவிழ்க்க நினைத்தார். தேனியில் தனது மகனை ஜெயிக்க வைத்தவர், அதிமுக வேட்பாளர்கள் இருவரை தோற்க செய்தார். பிக்பாக்கெட் என்று சொன்னால் அதற்கு ஓபிஎஸ்தான் தகுதியானவர்” என விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியை பலப்படுத்த பொதுச்செயலாளர் தேர்தலை உடனடியாக நடத்த எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்