விழுப்புரத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கேட்டு மறியலில் ஈடுபட்ட 91 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தினர்.
வேலூரில் அலங்காநல்லூரில் கைதானவர்களை விடுவிக்கக்கோரி 500-க்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சதீஷ்குமார் (22) என்பவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் தடையை மீறி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் போலீசார் கூட்டத்தினரை தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இத்னால் சிலர் போலீசாரை நோக்கி கற்களை எரிந்தார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலும் இளைஞர்கள் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏறு தழுவுதல் மீட்பு குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சமூக வலைதளங்கள் மூலமாக திரண்ட பல்வேறு தரப்பினரும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோட்டில் வீரத்தமிழர் அமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அன்னிய நிறுவனங்களின் குளிர்பானங்கள் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் தடையை மீறி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. திருப்பூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சையில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணத்தில் ஜல்லிக்கட்டு நடத்தி கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தஞ்சையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கூலித்தொழிலாளி விஜயகுமார் (வயது 32) நேற்று திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை உடனே போலீசார் காப்பாற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.