உண்மையிலேயே ராதிகாவை மாட்டிவிட்டது சரத்குமார் தான்: விசாரணைக்கு ஆஜராக சம்மன்!

புதன், 12 ஏப்ரல் 2017 (12:14 IST)
கடந்த 7-ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் வீட்டிலும் சோதனை நடத்தினர்.


 
 
ஆர்கே நகர் தொகுதியில் தினகரனை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டு மறுநாள் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல இருந்த நேரத்தில் இந்த அதிரடி சோதனை நடந்தது. இதனால் இது அரசியல் காரணத்துக்காக நடத்தப்பட்ட சோதனை என ஆளும் கட்சியால் குற்றம் சாட்டப்பட்டது.
 
இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணத்தை வைத்து சரத்குமாரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது வருமான வரித்துறை. விடிய விடிய சரத்குமாரிடம் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் போது ஆர்கே நகர் தேர்தலின் போதும் அதற்கு முன்னரும் சரத்குமார் எடுத்த முன்னுக்கு பின்னர் முரணான அரசியல் முடிவுகளுக்கு பின்னணியில் உள்ள ஆதயம் குறித்து வருமான வரித்துறை கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
 
ஆனால் இதற்கு சரத்குமார் சரியாக பதில் அளிக்காததால் வருமான வரித்துறை, தினகரனிடம் வாங்கிய 5 கோடியும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வாங்கிய 2 கோடியும் எங்கே வைத்திருக்கிறீர்கள் என நேரடியாகவே கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் இதற்கு பதில் அளித்த சரத்குமார், வேறு வழியில்லாமல் அந்த 5 கோடி ரேடான் நிறுவனத்தில் வந்த லாபம் எனவும் 2 கோடி ஒரு தயாரிப்பாளர் நண்பரிடம் வாங்கிய கடன் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து தான் வருமான வரித்துறை ராதிகாவின் ரேடான் நிறுவனத்துக்குள் நுழைந்து சோதனை நடத்தியது.
 
சரத்குமார் மாட்டியதில்லாமல், தன்னையும் மாட்டிவிட்டதாக அப்செட் ஆன ராதிகா சரத்திடம் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராதிகாவையும் விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்