தமிழ் சினிமா இயக்குனர் மற்றும் நடிகரான பாக்கியராஜ் சமீபமாக எக்ஸ் தளத்தில் வீடியோக்கள் பேசி பதிவிட்டு வருகிறார். அதில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட வீடியோவில், மேட்டுப்பாளையம் பத்ரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள அம்பரம்பாளையம் ஆற்றில் குளிக்க வருபவர்களை சிலர் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்வதாகவும், அவர்களின் உடல்களை மீட்டுத்தர உறவினர்களிடம் நிறைய பணம் கேட்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் விளக்கம் அளித்தார். அதில், இயக்குனர் பாக்கியராஜ் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அப்படியாக குற்றச்சம்பவம் எதுவும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை என்றும், மேலும் குறிப்பிட்ட அந்த ஆற்றுப்படுகை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் எந்த உயிரிழப்பு சம்பவங்களுமே நடைபெறவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று இயக்குனர் பாக்கியராஜை தொடர்பு கொண்டு பேசியபோது, ”போலீஸ்காரர்கள் அப்படிதான் சொல்வார்கள். நான் கேள்விப்பட்ட சம்பவங்களை வைத்துதான் அதை பேசினேன். அது உண்மைதான் என்று கமெண்ட் செக்ஷனிலும் பலர் கூறியிருக்கிறார்கள்” என்று விளக்கம் அளித்துள்ளார்.