9 அமைச்சர்களின் வீட்டில் அடுத்த ரெய்டு: கதகளி ஆடும் வருமான வரித்துறை!

செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (12:34 IST)
தமிழகத்தில் வருமான வரித்துறையின் அதிரடி சோதனைகளால் ஆளும் கட்சி தரப்பும் அவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களும் ஆடிப்போய் இருக்கிறார்கள். அடுத்தது எந்த அமைச்சரின் வீட்டில் சோதனை நடக்க இருக்கிறது என்ற பதற்றம் தமிழக அமைச்சர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


 
 
கடந்த 7-ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது வருமான வரித்துறை.
 
இதனை வைத்து நேற்று விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தியது வருமான வரித்துறை. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த இந்த விசாரணையில் பல்வேறு தகவல்களை விஜயபாஸ்கர் வருமான வரித்துறைக்கு அளித்ததாக கூறப்படுகிறது.
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி உள்பட பல்வேறு அமைச்சர்கள் சம்மந்தப்பட்ட பல விவகாரங்கள் இந்த விசாரணையில் அடிபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்தக்கட்டமாக வருமான வரித்துறை இவர்கள் மீது சார்ஜ்ஷீட் போட்டு வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது. மேலும் மிக விரைவில் இன்னும் ஒன்பது அமைச்சர்களின் வீடுகளில் அடுத்த அதிரடி ரெய்டு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்