வருமான வரி அதிகாரிகள் மீட்டிங் ; அடுத்து எங்கு ரெய்டு? - அலறும் அமைச்சர்கள்
திங்கள், 26 டிசம்பர் 2016 (12:55 IST)
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாட்டில் முறைகேடாக பணம் சேர்த்த பலருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர் சேகர் ரெட்டியை தொடர்ந்து தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் வீடு, அவரது மகனின் வீடு, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து தமிழகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
அவர்களிடம் கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையில், சில முக்கிய அமைச்சர்கள், அவரது மகன்கள், பினாமிகள் அவர்களுக்கு உதவியாக இருந்த அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என பலர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அடுத்தடுத்து அவர்கள் அனைவரிடமும் அதிரடி சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஹைதாராபத்தில் இருந்து 60க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் நேற்று சென்னை வந்தனர். அவர்களோடு சேர்த்து 150க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று ஒன்று கூடி ஆலோசனை செய்தனர்.
அதில் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், பல குழுக்களாக பிரிந்து அவர்கள் சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சோதனையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அடுத்தடுத்து சோதனை செய்யப்பட வேண்டிய இடங்கள் குறித்து பட்டியல் தயாராக இருப்பதால், எந்த நேரத்தில் அவர்கள் களத்தில் இறங்குவார்கள் எனத் தெரிகிறது.
இந்த விவகாரம், சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ் ஆகியோருக்கு நெருக்கமாகவும், உடந்தையாகவும் இருந்த காவல் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், பினாமிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என அனைவருக்கும் கிலியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.