ஆளுநர் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா? திருமாவளவன் கேள்வி
வியாழன், 29 ஜூன் 2023 (20:42 IST)
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளுநர் ஆர்_என்_ரவி அவர்களின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயற்பாடுகளைப் போலவே உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு நேற்று காணொளி மூலம் ஆஜர் படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று சமீபத்தில் தமிழ அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர். ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஆளுநர் #ஆர்_என்_ரவி அவர்களின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயற்பாடுகளைப் போலவே உள்ளது. அவருக்கு என்ன ஆனது என்கிற பரிதாபம் மேலிடுகிறது.
அவர் தனது அதிகார வரம்புகளை அறியாமல் செயல்படுகிறாரா? அல்லது உள்நோக்கத்துடன் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா?
அவரது தான்தோன்றித் தனமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. நாங்கள் சட்டப்படி இதை எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.