பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர திமுக அரசு மறுக்கிறதா? சீமான்

Sinoj

வெள்ளி, 15 மார்ச் 2024 (19:55 IST)
ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளதாவது;
 
''தமிழ்நாட்டிலுள்ள பஞ்சமி நிலங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை 15 நாட்களில் வெளியிட தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதற்கு மேலும், காலம் தாழ்த்தாமல் பஞ்சமி நிலங்களின் நிலை என்ன? அவை இப்போது எங்கே யாரிடம் உள்ளது? அவற்றை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்த தெளிவான ஆய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டுமென திமுக அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
 
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், அன்றைய சென்னை மாகாணத்தில் சமூக அடுக்கில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த ஆதித்தமிழ்க்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டது. ஆனால், சமத்துவம், சாதி ஒழிப்பு, சமூகநீதி எனப் பேசி ஆட்சி அதிகாரத்தை அடைந்த, 56 ஆண்டுக்கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் ஆதித்தமிழ்க்குடி மக்களை ஏமாற்றி, பெருமளவு பஞ்சமி நிலங்கள் முறைகேடாக அபகரிக்கப்பட்டது.
 
அவற்றை மீட்டுத்தரக்கோரிப் பல ஆண்டுகளாக ஆதித்தமிழ்க்குடி மக்கள் போராடி வரும் நிலையில், இன்று வரையில் அதற்கான எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. ஆட்சியாளர்களே பஞ்சமி நிலத்தை அபகரித்து உள்ளதால் அதனை மீட்டுத்தர திமுக அரசு மறுக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.
 
ஆகவே, பஞ்சமி நிலங்களை விரைந்து மீட்டு ஆதித்தமிழ்க்குடி மக்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன''என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்