டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம், ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் முதல் முறையாக ஹெலிகாப்டர் அசெம்பிளி ஆலையை அமைக்க உள்ளது. இந்த ஆலையில் ஏர்பஸ்ஸின் H125 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன.
டாடாவின் TASL நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான சுகரன் சிங் இதுபற்றிக் கூறுகையில், "இந்தியாவில் H125 ஹெலிகாப்டர்களுக்கான இறுதி அசெம்பிளி ஆலையை நிறுவ ஏர்பஸ் உடன் கூட்டுசேர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். வான்வழி தளங்களில் TASL கொண்டுள்ள நிபுணத்துவம் மற்றும் ஏர்பஸ் குழுமத்துடனான எங்கள் தொடர்ச்சியான கூட்டணியின் வலிமையின் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு உருவாகியுள்ளது. இது 'மேக் இன் இந்தியா' முயற்சிக்கு வலுசேர்ப்பதுடன், இந்தியாவின் வளர்ந்து வரும் ஹெலிகாப்டர் சந்தைக்கான ஆற்றலைக் குறிக்கிறது" என்று தெரிவித்தார்.