இன்ஸ்டாக்ராமை ஹேக் செய்த சென்னை இளைஞர் – சன்மானம் வழங்கிய இன்ஸ்டாக்ராம்

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (16:32 IST)
தனது செயலியை ஹேக் செய்த சென்னையை சேர்ந்த இளைஞரை பாராட்டி அவருக்கு சன்மானம் அளித்துள்ளது இன்ஸ்டாக்ராம் நிறுவனம்.

ஹேக்கிங் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அனுமதியில்லாமல் ஒரு வலைதளத்திற்குள் சென்று தகவல்களை திருடுவது, அதை வைத்து குற்ற செயல்களில் ஈடுபடுவது போன்றவைதான். ஆனால் ஹேங்கிங்கில் “அனுமதி பெற்ற ஹேக்கிங்” என்று ஒரு வகை உள்ளது.

அதாவது ஒரு நிறுவனமே தனது மென்பொருளை, வலைதளத்தை ஹேக் செய்ய ஒருவருக்கு அனுமதி வழங்கும். அனுமதி பெற்றவர் பல வழிமுறைகளை முயற்சி செய்து அதை ஹேக் செய்வார். பின்னர் எதனால் அது ஹேக் செய்யப்பட்டது என்ற கோளாறுகளை சம்பந்தபட்ட நிறுவனத்துக்கு தெரிவிப்பார். இப்படி தன்னை தானே ஹேக் செய்து குறைகளை கண்டுபிடிப்பதன் மூலம் அதை சரிசெய்து யாரும் ஹேக் செய்யாமல் பார்த்து கொள்வது பல நிறுவனங்களில் நடைபெறுகிறது.

சென்னையை சேர்ந்த லக்‌ஷ்மன் முத்தையா என்ற ஐடி இஞ்சினீயர் மாணவர் இன்ஸ்டாக்ராமை ஹேக் செய்துள்ளார். அப்போது பாஸ்வேர்டு மறந்தவர்களுக்கு அனுப்பப்படும் மேசேஜில் கோளாறு இருப்பதை கண்டறிந்திருக்கிறார். அதை இன்ஸ்டாக்ராமுக்கு தெரிவித்த லக்‌ஷ்மன் இதை வைத்து யாருடைய இன்ஸ்டாக்ராம் கணக்கிலும் புகுந்து விடலாம் என தெரிவித்திருக்கிறார்.

லக்‌ஷ்மனின் தகவலின் அடிப்படையில் இன்ஸ்டாக்ராம் அந்த கோளாறை சரிசெய்தது. மேலும் அவரது இந்த உதவியை பாராட்டி 30 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பின்படி 20 லட்சத்து 65 ஆயிரத்து 200ரூபாய்) சன்மானமாக அளித்து கௌரவித்துள்ளது. இவர் இதற்கு முன்னர் ஃபேஸ்புக்கில் இருந்த கோளாறை கண்டறிந்து மார்க் ஸுக்கெர்பெர்கிடம் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்