ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் ஒற்றுமையாக இருந்த அதிமுக சசிகலாவை முதல்வராக்க முயன்ற போது இரண்டாக உடைந்தது. சசிகலாவுக்கு எதிராக மவுனம் கலைத்து போர்க்கொடி தூக்கிய பின்னர் அரசியல் களம் அனல் பறந்தது.
அதிமுகவில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கத்தை விரும்பாத அதிமுகவினர் கடலென திரண்டு வந்து ஓபிஎஸுக்கு ஆதரவு வழங்கினர். இருப்பினும் சசிகலா தரப்பினர் எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்திருந்ததால் ஓபிஎஸ்-ஆல் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
ஆனாலும் கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஓபிஎஸ் ஆதரவு குறையவில்லை. மக்கள் ஆதரவு அமோகமாக இருந்தது. இந்நிலையில் மேலும் சசிகலாவின் எதிர்ப்புகளை தனக்கு சாதகாமாக அறுவடை செய்ய பன்னீர்செல்வமும், தீபாவும் திட்டமிட்டு வரும் பிப்ரவரி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதனால் மேலும் ஓபிஎஸ் தரப்பு பலமடைந்து கட்சியை கைப்பற்ற அது சாதகமாயிடும் என்பதால் சசிகலா தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. இதனால் தற்போது பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் இணைக்க சசிகலா ஆதரவாளர்கள் முயன்று வருகின்றனர்.
தேனீ அருகே உள்ள போடி சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கூட்டம் ஒன்றில் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தங்க தமிழ்ச்செல்வன் பேசினார். அப்போது அவர் மறப்போம், மன்னிப்போம் என்ற வகையில் ஒ.பன்னீர்செல்வம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றார்.
மேலும் பன்னீர்செல்வத்தை கடுமையாக எதிர்த்து வந்த தம்பிதுரையும் ஓபிஎஸ்ஸை திரும்பவும் கட்சியில் சேர்ப்பது பற்றி சசிகலா முடிவு செய்வார் எனவும், அவர் எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் எனவும் கூறினார். இவ்வளவு நாள் பன்னீர்செல்வத்தை மிகவும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தவர்கள் இன்று திடீரென அவரை கட்சியில் மீண்டும் சேர்ப்பது குறித்து பேசுவது பன்னீரின் மக்கள் ஆதரவை பார்த்த பயத்தில் தான் என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.