ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றால்? - எச்சரிக்கும் ஓ.பி.எஸ்..

புதன், 29 மார்ச் 2017 (17:51 IST)
விரைவில் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஓ.பி.எஸ் அணி சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.


 

 
ஓ.பி.எஸ் அணியின் சார்பாக மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஓ.பி.எஸ் மீது பல புகார்களை, நேற்று பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, கிரீம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் இன்று காலை ஓ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
ஜெயலலிதா குடும்ப அரசியலுக்கு எதிரானவர். ஒரு குடும்பத்தின் கட்டுப்பாடில் கட்சியும், ஆட்சியும் செயல்படக்கூடாது எனபதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால், அதைத்தான் தற்போது சசிகலா தரப்பு செய்து வருகிறது.
 
ஜெ.மறைவிற்கு பின் முதல்வராகும் எண்ணம் எனக்கு இல்லை. மூத்த அமைச்சர்களும், சசிகலாவும் கேட்டுக் கொண்டதால் அதை ஏற்றுக் கொண்டேன். அதேபோல், கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே சசிகலாவை பொதுச்செயலராக நியமிப்பதை ஏற்றுக் கொண்டேன். அதன் பின் அவர் முதல்வராக ஆசைப்பட்டார். அதனால் பிரச்சனை எழுந்தது.
 
ஜெ. மருத்துவமனையில் இருந்த போது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து என்னிடம் யாருமே விளக்கவில்லை. வெளிநாட்டிற்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சையளிக்கலாம் என கூறினேன். ஆனால், அது ஏற்கப்படவில்லை. அவரின் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். 
 
நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து தினகரன் மக்களை ஏமாற்றுகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றால், முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி மாற்றப்படுவார்” என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்