50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - செந்தில்நாதன்

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (20:33 IST)
கட்சியில் எனக்கு சோதனையான காலக்கட்டத்தில் விசுவாசமாக இருந்த காரணத்தால் அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன் செய்தியாளர்களிடம் கூறினார்.
அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில்  கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார்.  இதற்காக இன்று அரவக்குறிச்சி காவல் நிலையம் அருகில் அதிமுக சார்பில் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. 
 
மக்களவை துணை சபநாயாகர் தம்பிதுரை,  மாநில அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர்,  கே.பி. அன்பழகன்.  செங்கோட்டையன், தங்கமணி,  கே.சி. கருப்பண்ணன்,  வெல்லமண்டி நடராஜன்,  வளர்மதி,  சரோஜா மற்றும் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். பணிமனை திறப்பு விழாவுக்குப் பிறகு   திறந்த ஜீப்பில்  வேட்பாளர் செந்தில்நாதன் மக்களவை துணை சபநாயகர் தம்பிதுரை,  அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பேரணியாக வந்தனர். 
 
சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியாக வந்த அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  
 
அப்போது,  மக்களவை துணை சபநாயாகர் தம்பிதுரை,  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்,  தமாகாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. நாட்ராயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், கட்சியில் எனக்கு நேரிட்ட பல்வேறு சோதனையான காலக்கட்டத்தில், கட்சிக்கு விசுவாசமாக இருந்தேன்.  அதன் காரணத்தால் இப்போது எனக்கு அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்