மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

Prasanth K

வியாழன், 24 ஜூலை 2025 (13:05 IST)

சென்னையில் மனைவி தனது மகளை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார் என பயந்து கணவனே மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். எலெக்ட்ரானிக்ஸ் பழுது மற்றும் விற்பனை செய்து வரும் இவருக்கு ரெபேக்கா என்ற மனைவியும், ஸ்டெபி ரோஸ் என்ற 7 வயது மகளும் உள்ளனர். கடந்த சில காலமாக ரெபேக்கா - சதீஷ்குமார் இடையே வாக்குவாதம், சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், ரெபேக்கா அவரது தாயார் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விட்டார்.

 

அதன்பின்னர் குழந்தையை பார்க்க அடிக்கடி வரும் சதீஷ்குமார், ஸ்டெபி ரோஸை வெளியே அழைத்துச் செல்வது, திண்பண்டங்கள் வாங்கி தருவது என இருந்துள்ளார். சமீபத்தில் ரெபேக்கா குழந்தை தன்னிடமே வளர வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் குழந்தையை பார்க்க வந்த சதீஷ் குழந்தையை அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக் கொன்றதுடன், தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

உயிருக்கு ஆபத்தான நிலையில் சதீஷ்குமார் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆகஸ்டு 6 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மகளை இழந்த ரபேக்கா கண்ணீருடன் பேசியபோது, “சதீஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி அவருடன் சண்டை ஏற்பட்டு வந்தது. அதனால் அவரை பிரிந்து எனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டேன். அவருக்கு என்னையும், என் தந்தையையும்தான் பிடிக்காது. அதனால் எங்களைதான் ஏதாவது செய்வார் என்று நினைத்தேன். அவன் சண்டை வரும்போதெல்லாம், நீ என்னை பிரிந்து சென்றால் குழந்தையும் நானும் செத்துவிடுவோம் என கூறுவான். அதுபோலவே இப்போது செய்துவிட்டான்” என கூறி கதறி அழுதுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்