சசிகுமார் படுகொலையில் விசாரணைக்கு பயந்து தீக்குளித்தவர் பலி

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (12:33 IST)
சசிக்குமார் படுகொலையில் தன்னையும் விசாரணை செய்வார்கள் என்கிற அச்சத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இந்து முன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் உயிரிழந்தார்.
 

 
இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 22 ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து சங் பரிவார அமைப்புகள் கோவை மாவட்டம் முழுவதும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த வன்முறையில் சுமார் ஐந்து கோடிக்கும் அதிகமான பொதுமக்களின் சொத்துக்கள் சேதமடைந்தது. மேலும், இரண்டு நாட்கள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
 
இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
 
இந்நிலையில், கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த இந்து முன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் கடந்த மூன்றாம் தேதி திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
 
இதற்கிடையில், ஆனந்தகுமாரின் சகோதரர் ரஞ்சித்குமார் வியாழனன்று அரசு மருத்துவமனை வளாகத்திலேயே தற்கொலைக்கு முயன்று அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி சனியன்று மதியம் உயிரிழந்தார்.
 
இதனிடையே சசிக்குமார் படுகொலை விவகாரத்தில் கொலையாளி யார் என்று ஆனந்தகுமாருக்கு தெரியும் என்றும், இதன் காரணமாகவே அச்சத்திற்குள்ளாகி தற்கொலைக்கு முயற்சித்தார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது.
அடுத்த கட்டுரையில்