சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (16:46 IST)
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம் பெண் பொறியாளர் கடந்த ஜீன் 24ம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தமிழகமெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ராம்குமார் நிரபராதி என்று அவரின் வழக்கறிஞர் ராம்ராஜ் கூறிவருகிறார். மேலும், சுவாதி பற்றிய பல தகவல்களை போலீசார் மறைத்து வருவதாகவும் அவர் கூறிவருகிறார்.

எனவே, பல்வேறு மர்மங்களை அடக்கிய சுவாதி வழக்கை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ராம்குமாரின் தாய் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு இன்று நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய ராம்ராஜ் “சுவாதி வழக்கு பற்றி போலீசார் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. போலீசார் உண்மை குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சி செய்கின்றனர். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடவேண்டும்” என்று வாதாடினார்.

ஆனால், போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இதுதொடர்பாக பதில் மனுவோ அல்லது அறிக்கையோ தாக்கல் செய்ய விரும்பவில்லை. நீதிமன்றம் கோரினால், வழக்கில் அனைத்து விசாரணை விவரங்களையும் தாக்கல் செய்கிறோம். இந்த வழக்கு விசாரணை ஒருதலைபட்சமாக நடைபெறவில்லை. விசாரணை சரியான திசையில் செல்கிறது' என்றார்.

அதன்பின் தீர்ப்பளித்த நீதிபதி, சுவாதி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி புஷ்பம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அடுத்த கட்டுரையில்