பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்.. 28 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி..!

Siva

புதன், 28 மே 2025 (13:52 IST)
சென்னை உயர் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் 28 வார கருவை கலைக்க அனுமதியளித்துள்ளது.
 
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான இளம்பெண், 80 சதவீத மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். இவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒருவன் அவரை பாலியல் பலாத்காரம் செய்தான். இதனால் கர்ப்பமாகியுள்ள இளம்பெண், தனது தாயின் மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் குற்றவாளியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், 28 வார கருவை கலைக்க தேவையான அனுமதிக்காக மருத்துவமனைக்கு சென்றபோது, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதி மறுத்தது. இதையடுத்து, இளம்பெண்ணின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
 
இந்த வழக்கை எடுத்துக்கொண்ட நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, 24 வார காலக்கெடு கடந்திருந்தாலும், பெண்ணின் மாற்றுத்திறனை கருத்தில் கொண்டு அவசர சூழ்நிலையை உணர்ந்து, கருவை கலைக்க சட்டபூர்வமான அனுமதி வழங்கினார்.
 
மேலும், உடனடியாக மருத்துவக் குழு அமைத்து, அந்த பெண்ணின் உடல்நிலை மதிப்பீடு செய்து, அவசியமான சிகிச்சையை வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிட்டால் அதன் காரணத்தை மனுதாரருக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் மருத்துவமனை டீனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்