தேர்வு எழுத செல்லும் சில நிமிடங்களுக்கு முன்னர் மாரடைப்பால் தாய் உயிரிழந்த நிலையில், தாயிடம் கண்ணீர் மல்க விடைபெற்று உயிரியல் தேர்வு எழுத சென்ற மாணவியை பற்றிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பட்டுக்கோட்டைக்கு அருகே காவியா என்ற மாணவி பொதுத்தேர்வு எழுதி வருகிறார். காவியாவின் தந்தை ராஜேந்திரன் மனவளர்ச்சி குறைவுடன் இருப்பதால், அவரது தாய் கலாவின் உழைப்பில் மட்டுமே அந்த குடும்பம் இயங்கிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், இன்று உயிரியல் தேர்வு எழுதுவதற்காக காவியா தயாராகிக் கொண்டிருந்தபோது, திடீரென கலாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் சில நிமிடங்களில் உயிரிழந்தார். தாயின் மறைவால் அதிர்ச்சியடைந்த மாணவி காவியா கதறி அழுதார். பின்னர், தாயின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி விடைபெற்று, உயிரியல் தேர்வு எழுத சென்றார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தந்தையை இழந்த நிலையில் ஒரு மாணவன் பிளஸ் டூ தேர்வு எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.